

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இதன்மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கொந்தகையில் 2 ஏக்கரில் ரூ.18.46 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலை 10 முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும்அகழ் வைப்பகத்தை பார்வையிட, நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல் துறை அறிவித்திருந்தது. காலை 10 மணிக்கு டிக்கெட் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காலை 9 மணி முதல் 10.20 வரை நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, நடிகை ஜோதிகா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் மற்றும் வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோர் அகழ் வைப்பகத்தை பார்வையிட்டனர்.
இதற்கிடையே, நேற்று காலை 8 மணி முதலே பள்ளி மாணவர்கள், வெளியூரிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் என ஏராளமானோர் அகழ் வைப்பகத்தை பார்வையிட வரிசையில் ஆர்வமாக காத்திருந்தனர். காலை 10 மணிக்கு பிறகும் அனுமதிக்காததால், வெயிலில் காத்திருந்த பார்வையாளர்கள் அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம் கூறுகையில், அகழ் வைப்பகம் ஏப்.1ல் இருந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சரியாக காலை 10 மணிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் எந்த விதி மீறலும் இல்லை என்று கூறினார்.