

திருநெல்வேலி: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக சர்ச்சையில் சிக்கிய ஏஎஸ்பி-க்கு ஆதரவாக, திருநெல்வேலி மாவட்ட கிராமப்புறங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலில் அவருக்கு ஆதரவாக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். நேற்று 5 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மாநில மனித உரிமை ஆணையமும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, சர்ச்சையில் சிக்கிய ஏஎஸ்பி பல்வீர்சிங்கின் படத்தை கோயிலில் வைத்து கிராம மக்கள் பூஜை நடத்தியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு ஆதரவான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் ஏஎஸ்பிக்கு ஆதரவாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்ற தலைப்பிட்டு ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் புகைப்படத்துடன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து வைக்கப்பட்டுள்ள பதாகையில், “பல்வீர் சிங்கை மீண்டும் பணியில் அமர்த்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றவாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இங்குள்ள முப்புடாதி அம்மன் கோயிலில் அம்மன் சிலையின் பாதத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் படத்தை வைத்து, அவருக்கு மீண்டும் பணி கிடைக்க வேண்டி சிறப்பு பூஜையை மக்கள் நடத்தினர்.