

சென்னை: சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைசெயலர் சிவ் தாஸ் மீனா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
அதில் அவர் பேசியதாவது: பொது மக்களிடம் குப்பைகளை வீடுகள்தோறும் வாங்கி அதனை முறையாக குப்பை சேகர மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதிக குப்பை கொட்டும் இடங்களில் தேவைப்படும் அளவுக்கு குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். குப்பைத் தொட்டிக்கு வெளியில் பொதுமக்கள் குப்பை போடுவதைத் தவிர்க்க வேண்டும். பொது மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள அடையாறு, கூவம்உள்ளிட்ட நீர்வழித் தடங்களின் கரைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
அவ்வாறு கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அங்குஎவ்வித குப்பைகளும் கொட்டாதவாறு கண்காணிக்க வேண்டும். குப்பைகளை தங்களது இல்லங்களுக்கு வரும் வாகனங்கள், குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர வேறு எங்கும் குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கு மகளிர் சுய உதவிக் குழு மூலம் விழிப்புணவு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையர்கள் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.சிவகுரு பிரபாகரன் கலந்துகொண்டனர்.