Published : 02 Apr 2023 06:48 AM
Last Updated : 02 Apr 2023 06:48 AM
சென்னை: சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னையில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய அமர்வை அமைப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்தது. உடனுக்குடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கரோனா பேரிடரின்போதுதான் இங்கு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தற்போது கட்டிடம் புனரமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமர்வுகள் மூலம் தீர்ப்பாயப் பணிகளும் மிக வேகமாக நடந்து வருகின்றன. இதுவரை 50 சதவீதத்துக்கும் மேலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
வணிக செயல்பாடுகள் குறித்து கம்பெனி சட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். இதை அடிப்படையாகக் கொண்டே வணிகரீதியான செயல்பாடுகளில் இந்தியா வெளிப்படைத் தன்மையுடன் இருக்க முடியும்.
ஒப்பந்தம், முதலீடு போன்றவற்றில்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அப்போது, நீதிமன்றங்களின் விசாரணை தாமதமாக இருப்பதாகவும், போதிய கம்பெனி சட்ட தீர்ப்பாயங்கள் இல்லாததாலும் தீர்ப்பாயங்களை விரைவான விசாரணைக்கு அணுக முடியவில்லை எனவும் புகார்கள் வருகின்றன.
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியது அவசியம். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம், திருத்தங்கள் மூலமாகவே சட்டங்களை வலுப்படுத்த முடியும். இதனாலேயே சட்ட திருத்தங்களைக் கொண்டு வருகிறோம். ஆனால் ஏராளமான சட்டங்கள் திருத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள சட்ட திட்டங்களால் மோசடி செய்துவிட முடியாது என முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி அசோக் பூஷன், நீதித் துறை உறுப்பினர் வேணுகோபால், தொழில்நுட்ப உறுப்பினர் ஸ்ரீஷா மெர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT