3 அடுக்குகளுடன் 3,700 பேர் அமரும் வசதி; 16 ஏக்கரில் மதுரையில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: பொதுப்பணித்துறை தகவல்

ஜல்லிக்கட்டு | கோப்புப் படம்
ஜல்லிக்கட்டு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரையில் 3 அடுக்குகளுடன் 16 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு உலகப் புகழ்பெற்றது. உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகப் பார்வையாளர்கள் வரை இந்தப் போட்டியைக் காண திரள்வார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடமும், அதன் வாடிவாசலும் இடநெருக்கடியில் இருப்பதால் பார்வையாளர்கள் அனைவருமே இந்தப் போட்டியை கண்டு ரசிக்க முடியவில்லை. அதனால், மதுரை அலங்காநல்லூரில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது.

அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நிரந்தரமான அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,"ஜல்லிக்கட்டு அரங்கம் 3 அடுக்குகளுடன் 3700 பேர் அமரும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகள், நுழைவு வாயில், அருங்காட்சியகம், காளை கொட்டகை, வாடி வாசல், காளைகள் நிற்கும் இடம், கால்நடை மருந்தகம், துணை சுகாதார மையம் என்று அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in