விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசத் தடை: கடலூர் ஆட்சியருக்கு அன்புமணி கண்டனம்

அன்புமணி ராமதாஸ்  | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் என்எல்சி குறித்து பேச கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளை தீர்ப்பது தான். கடலூர் மாவட்ட உழவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே என்.எல்.சி நிலப்பறிப்பு தான். அடிப்படை சிக்கலான என்.எல்.சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக உழவர் குறை தீர்க்கும் கூட்டம்?

என்.எல்.சி. நிலங்களை பறிக்கவில்லை என்றால், என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், அது குறித்து விவாதிக்கவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் அஞ்சுவது ஏன்? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் ஏன்?

என்எல்சி நிறுவனம், கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது. அடக்குமுறைகள், அர்த்தமற்ற தடைகள் ஆகியவற்றின் மூலம் என்.எல்.சிக்கு எதிரான உணர்வுகளைத் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் அனைத்து அடக்குமுறைகளையும் முறியடித்து மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி" இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in