Last Updated : 01 Apr, 2023 07:30 AM

 

Published : 01 Apr 2023 07:30 AM
Last Updated : 01 Apr 2023 07:30 AM

தூத்துக்குடி கோயிலில் பழமையான 13 ஓலைச்சுவடி கட்டு கண்டெடுப்பு: பாதுகாத்து பராமரிக்க அறநிலையத் துறை நடவடிக்கை

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பழமையான ஓலைச்சுவடிகளுடன், ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழுவினர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோயிலில் பழமையான 13 ஓலைச்சுவடி கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், மடங்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பாதுகாக்கவும், அவற்றை நூலாக்கம் செய்யவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பணிகளுக்காக ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் அறிஞருமான சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் ஆய்வாளர்கள் தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோயிலில் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் 13 பழமையான ஓலைச்சுவடி கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: 195 கோயில்களில் இதுவரை கள ஆய்வு செய்து, 1 லட்சத்து76 ஆயிரத்து 149 சுருணை ஏடுகளையும், 335 இலக்கியச் சுவடிகளையும், 26 செப்புப் பட்டயங்களையும் கண்டு பிடித்துள்ளோம். இக்கோயிலில் 13 ஓலைச்சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் ஒரு பெரிய ஓலைச்சுவடி கட்டில் ஏழு திருமுறைகளும், மற்றொரு கட்டில் ஏழு திருமுறைகளோடு, காரைக்கால் அம்மையார் இயற்றிய திருப்பதிகங்களும் காணப்பட்டன. இந்த ஓலைச்சுவடியை பிரதி செய்தவர் நம்பிக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற குறிப்பு உள்ளது.

சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் எனும் நூல் அடங்கிய ஒரு சுவடிப் பிரதியும் இருந்தது. இந்த சுவடியைப் பிரதி செய்தவர் கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்த ஆ.வைகுண்டம் பிள்ளை என்ற குறிப்பு சுவடியில் காணப்பட்டது. மற்றொரு சுவடியில் பெரியபுராணமும், நம்பியாண்டார் நம்பி எழுதியதிருத்தொண்டர் திருவந்தாதியும் உள்ளது. இந்தச் சுவடியை பிரதிசெய்தவர் பொ. அய்யன்பெருமாள்பிள்ளை என்ற குறிப்பு காணப்படுகிறது.

மாணிக்கவாசகர் இயற்றிய எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படும் திருவாசகம் அடங்கிய இரண்டு ஓலைச்சுவடிப் பிரதிகள்இருந்தன. அத்தோடு மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவை நானூறு எனும் சுவடி ஒன்றும் இருந்தது.

அகத்தியர் தேவாரத் திரட்டு, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணசாரம், தோத்திரசகத் திருவிருத்தம் ஆகிய நூல்கள் அடங்கிய ஒரு சுவடியும் இருந்தது. இரண்டு பெரிய சுவடிகளில் பதினொன்றாம் திருமுறை நூல்கள்(40) முழுமையாக இருந்தன.

இதில் சங்க இலக்கிய நூலாகக் கருதக் கூடிய திருமுருகாற்றுப்படையும் உள்ளது. மற்றொரு சுவடியில் திருமூலர் இயற்றிய பத்தாம் திருமுறை எனப்படும் திருமந்திரம் நூல் முழுமையாக இருந்தது. இதில் பன்னிரு திருமுறை சுவடிகள் இருந்தன.

சங்கரராமேசுவரர் கோயிலில் உள்ள பாகம்பிரியாள் அம்பாளின் பெருமையை எடுத்துரைக்கும் நூலாக, சானகிநாதன் என்பவர் எழுதிய அருள்தரும் பாகம்பிரியாள் திருப்பள்ளியெழுச்சி என்ற சுவடியும், பழனி கிருட்டிணன் என்பவர் எழுதிய பாகம்பிரியாள் இரட்டைமணிமாலை என்ற சுவடியும் இருந்தன. இவை 13 சுவடிக்கட்டுகளில் உள்ள 3,127 ஏடுகளைப் பராமரித்து பாதுகாக்கும் பணியோடு, அவற்றை அட்டவணைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x