வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி வருவதாக தகவல் வெளியாகியதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிப்பு பணி

வரும் 9-ம் தேதி பிரதமர் வருவதாக தகவல் வெளியாகியதை அடுத்து, முதுமலை புலிகள் காப்பக பகுதியில் தீவிரமாக நடைபெற்றுவரும் சாலை சீரமைப்பு பணி. (அடுத்த பட ம்) தெப்பக்காடு முகாமில் யானைகள் அடைத்து வைக்கப்படும் கரால் பகுதிக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுவரும் தற்காலிக நடைபாதை.
வரும் 9-ம் தேதி பிரதமர் வருவதாக தகவல் வெளியாகியதை அடுத்து, முதுமலை புலிகள் காப்பக பகுதியில் தீவிரமாக நடைபெற்றுவரும் சாலை சீரமைப்பு பணி. (அடுத்த பட ம்) தெப்பக்காடு முகாமில் யானைகள் அடைத்து வைக்கப்படும் கரால் பகுதிக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுவரும் தற்காலிக நடைபாதை.
Updated on
1 min read

முதுமலை: பிரதமர் மோடி வரும் 9-ம் தேதி நீலகிரி மாவட்டம் வரவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாட்டிலுள்ள புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்திருந்தார்.

மேலும், பிரதமர் மோடி வரும் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு செல்கிறார். அங்கிருந்து, அதன் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் எனவும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "பிரதமர் மோடி முதுமலைக்கு வரும் உறுதியான தகவல்கள் எதுவும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. டெல்லியில் இருந்து பிரதமர் வரும் விவரங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வோம்" என்றனர்.

முதுமலைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, முதுமலையில் தெப்பக்காடு முகாமுக்கு செல்லும் சாலைகள் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர குட்டி யானைகள் பராமரிக்கப்படும் கரால் பகுதிக்கும் புதிதாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "இங்கு எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, உயர் அதிகாரிகள் வந்து செல்வதுடன், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய பிரமுகர்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

அதை கருத்தில்கொண்டு பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் வருகை குறித்து, இதுவரை எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in