Published : 01 Apr 2023 06:35 AM
Last Updated : 01 Apr 2023 06:35 AM
பொள்ளாச்சி: நெகமத்தில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் நெசவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், விவசாய பொருட்கள் என ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறப்பான பொருட்கள் மற்றும் அடையாளங்களை கண்டறிந்து, அவற்றை கவுரவிக்கவும், அங்கீகரிக்கவும் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
இதனால் அப்பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தவும், அப்பொருட்களின் பாரம்பரியத்தை அடையாளம் காணவும் முடிகிறது. 1999-ல் புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்றியது. 2003-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தின் அடிப்படையில், ஒவ்வோர் ஊரில் உள்ள சிறந்த விஷயங்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், அறிவுசார் சொத்து உரிமை துறை ஆகியவை இணைந்து புவிசார் குறியீட்டை வழங்குகிறது. இதனடிப்படையில் நெகமம் காட்டன் சேலைக்கு புவிசார் அங்கீகாரம் கேட்டு, புவிசார் குறியீடு பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புவிசார் குறியீடு பதிவகத்தில் பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வ.சஞ்சய் காந்தி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
நெகமம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தனித்திறமை உடைய நெசவாளர்கள், கைத்தறியில் காட்டன் சேலைகளை நெய்து வந்தனர். இச்சேலைகளின் தரம், வடிவமைப்பு, பல வண்ணங்கள் ஆகியவற்றால் கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்று விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக ‘நெகமம் காட்டன் சேலைகள்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெகமம் காட்டன் சேலைக்கு தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை, நெகமம் காட்டன் சேலை உற்பத்தி செய்யும் 15 கைத்தறி நெசவாளர் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்காக, 2021 ஜூன் 29-ம் தேதி புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்ப எண் (766) தரப்பட்டது.
அனைத்து சட்ட விதிமுறைகளும் கையாளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. விண்ணப்பத்தை புவிசார் குறியீடு பதிவகமும் ஏற்றுக்கொண்டது. 2022 நவம்பர் 30-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசிதழில் வெளியிடப்பட்டு நான்கு மாதங்கள் நிறைவடைந்த பிறகு புவிசார் குறியீடு கிடைத்துவிடும்.
நெகமம் காட்டன் சேலைக்கான புவிசார் குறியீடு விண்ணப்பத்தை பொருத்தவரை, கடந்த மாதம் 30-ம் தேதியுடன் நான்கு மாதம் முடிவடைந்துவிட்டது. புவிசார் குறியீடு உறுதி செய்யப்படும் என்பதால், நெகமம் காட்டன் சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துவிட்டதாக அர்த்தம் கொள்ளப்படும், விரைவில் அதற்கான சான்றிதழ் கிடைத்துவிடும்" என்றார்.
- எஸ்.கோபு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT