Published : 01 Apr 2023 06:39 AM
Last Updated : 01 Apr 2023 06:39 AM
சென்னை: பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் இலவச நலத்திட்ட பட்டியலில் இருந்து மடிக்கணினி நீக்கப்பட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, 2019-ம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம் மாணவ,மாணவிகளுக்கு இலவசமடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவலால் மடிக்கணினி கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டது.
அதற்குபின் உலகளவில் மடிக்கணினி தயாரிப்புக்கு தேவையான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் அதன் விலை வெகுவாக உயர்ந்தது. இதன்காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இதனிடையே, மடிக்கணினிக்கு பதிலாக கையடக்ககணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை. சர்வதேச மந்தநிலை காரணமாக கொள்முதலில் தாமதம் நிலவுகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 15 விதமான இலவச நலத்திட்டங்கள், பொருட்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் வழக்கமாக இடம்பெறும் இலவச மடிக்கணினி நடப்பாண்டு இடம்பெறவில்லை.
இதனால் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதா எனும் கேள்வி எழுந்துள்ளது. மேலும், டேப்லெட் குறித்த தகவலும் இடம் பெறாதது சர்ச்சையாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT