

புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல். பாஜக நிர்வாகியான இவர், அரசு ஒப்பந்தப் பணிகளையும் செய்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சக்திவேலுக்கும், ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரியின் கணவர் சண்முகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சக்திவேல் அனுதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னை தாக்கியசக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறந்தாங்கி காவல் நிலையத்தில் சண்முகநாதன் புகார் அளித்துள்ளார். இருவர் அளித்த புகார்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்றுசக்திவேலை சந்தித்து ஆறுதல்கூறினார். பின்னர், அறந்தாங்கிஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற எச்.ராஜா அங்கிருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீஸார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து பாஜகவினருடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “அறந்தாங்கி ஒன்றியத்துக்கு மகேஸ்வரிதான் தலைவர். ஆனால், அவரது அதிகாரத்தை அவரது கணவர் தவறாக பயன்படுத்தி வருகிறார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கேள்வி கேட்டதற்காக பாஜக நிர்வாகி சக்திவேலை சண்முகநாதன் தாக்கியது கண்டனத்துக்கு உரியது. சண்முகநாதனை உடனே கைதுசெய்ய வேண்டும்” என்றார்.