

சோதனை குழாய் (டெஸ்ட் டியூப்) மூலமாக பிறந்த பெண்ணுக்கு சென்னையில் குழந்தை பிறந்துள்ளது. சோதனைக் குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
ராமமூர்த்தி பொன்னா தம்பதியர் திருமணம் ஆகி 25 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். டாக்டர் கமலா செல்வராஜின் சிகிச்சையால் இவர்களுக்கு சோதனைக் குழாய் மூலம் 1990-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கமலா ரத்னம் என்று அவரது பெற்றோர் பெயர் வைத்தனர்.
இந்நிலையில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்த கமலா ரத்னம் பிரசவத்துக்காக நுங்கம்பாக்கம் ஜிஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு கடந்த வியாழக்கிழமை மாலை அழகான பெண் குழந்தை பிறந்தது. இவருக்கும் டாக்டர் கமலா செல்வராஜ்தான் பிரசவம் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக டாக்டர் கமலா செல்வராஜ் கூறியதாவது:
கமலா ரத்னம் தனது 24-வது வயதில், ஒரு பெண் குழந்தையை பெற்றுள்ளார். கமலா ரத்னம் பிறந்த போது, இந்த குழந்தை மற்றவர் களைப் போல வாழ முடியுமா? குழந்தை பிறக்குமா? என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்போது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது.
கமலா ரத்னத்துக்கு பிறந்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் 2.8 கிலோ எடையுடன் உள்ளது. இந்தியாவிலேயே சோதனை குழாய் மூலமாக பிறந்த பெண் குழந்தை பெறுவது இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.
கமலா ரத்னத்துக்கு பிறந்த குழந்தையை காட்டுகிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.