

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ரூ.1.60 கோடி மதிப்புள்ள வீட்டு மனையுடன் கூடிய 2 வீடுகளை மீட்டுக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் கட்டிட மேஸ்திரி நேற்று புகார் கொடுத்துள்ளார்.
தி.மலை மாவட்டம் தண்டராம் பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி அருகே உள்ள சேரந்தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் கட்டிட மேஸ்திரி அய்யா துரை(57). இவர், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயனிடம் நேற்று மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த மனுவில், “கட்டிட மேஸ்திரி பணியுடன், வீட்டு மனை வாங்கி வீடு கட்டிக் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறேன். நானும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் பெயின்டர் ஒருவரும் சேர்ந்து, திருவண்ணாலை அடுத்த சமுத்திரம் ஊராட்சி வனதுர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள சொர்ணபூமி நகரில் 2,080 சதுரடி பரப்பளவு கொண்ட 2 வீட்டு மனைகளை வாங்க, ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.5 லட்சம் முன்பணம் கொடுத்தோம்.
மேலும் மீதமுள்ள தொகை மற்றும் கட்டுமான பணிக்காக பிரபல பைனான்ஸ் அதிபரிடம் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.22 லட்சம் கடன் பெற்றோம். இதற்கு ஈடாக, 2 வீட்டு மனைகளை, பைனான்ஸ் அதிபரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது, கடன் தொகையை திருப்பி செலுத்தியதும், 2 வீட்டு மனை களையும் மீண்டும் ஒப்படைத்துவிட வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வட்டியுடன் ரூ.20 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்டது.
மீதமுள்ள ரூ.2 லட்சத்தை கொடுத்ததும், 2 வீட்டு மனைகளை திருப்பி ஒப்படைப்பதாக கடன் கொடுத்தவர் உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து, 2 வீட்டு மனைகளிலும் இரண்டு வீடுகளை கட்டி முடித்தோம். இந்த வீடுகளை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதனால், கடன் பாக்கி ரூ.2 லட்சத்தை கொடுத்துவிடுகிறோம், எங்களது 2 வீட்டு மனைகளையும் திருப்பி ஒப் படைக்குமாறு கடந்த ஜனவரி மாதம் கேட்டபோது, கொடுக்க மறுத்து விட்டார்.
மேலும் கொலை மிரட்டல் விடுக்கிறார். ரூ.2 லட்சம் கடன் தொகைக்காக ரூ.1.60 கோடி இடத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். எங்களது வீட்டு மனையுடன் கூடிய 2 வீடுகளை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.