

தமிழக கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் எந்திரங்கள்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெள்ளிக்கிழமை உயர் கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் மற்றும் ரூ.1.26 கோடியில் நாப்கின் எரியூட்டி எந்திரங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரி விவகாரம்: முதல்வர் விளக்கம்: சென்னை கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பல்வேறு உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தைப் பொறுத்த வரையில், தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது. இது குறித்து கலாஷேத்ரா இயக்குநர் டிஜிபியை சந்தித்து பாலியல் புகார் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.
பின்பு தேசிய மகளிர் ஆணையமே, இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டோம் என்று தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்பின்னர் தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் துறைக்கு இதுவரை எழுத்துபூர்வ புகார் எதுவும் வரவில்லை. இந்த விவகாரத்தைப் பொறுத்த வரையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
ரூ.250 கோடியில் மாதிரிப் பள்ளிகள்: மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடியில் மாபெரும் “வாசிப்பு இயக்கம்" தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதத்தை தொடர்ந்து, சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரூ.250 கோடியில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சனிக்கிழமை முதல் முகக்கவசம் கட்டாயம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தாக்கம் உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் தான் உள்ளது. இருந்தாலும் சில நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் தான், சனிக்கிழமை முதல் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனால் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு உள்ளது என்று அர்த்தம் கிடையாது. நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம். முதலில் மருத்துவமனையில் இருந்து முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
சைபர் தாக்குதல் அச்சுறுத்தலில் அரசு வலைதளங்கள்: இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு வலைதளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தலில் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி சார்ந்து இயங்கி வரும் செக்யூரின் மற்றும் இவன்டி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் இதனை அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
‘பிரதமர் மோடி எம்.ஏ சான்றிதழை வழங்கத் தேவையில்லை’ : பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஏ பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் நகலை வழங்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனுவினை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், அந்த சான்றிதழ் நகலை வழங்க குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிரேன் வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை வழங்கினார். அதில், ''பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகலை குஜராத் பல்கலைக்கழகம் வழங்கத் தேவையில்லை. இந்த வழக்கை தொடர்ந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது'' என தீர்ப்பளித்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ''பிரதமரின் பட்டப் படிப்பைத் தெரிந்துகொள்ளக்கூட ஒரு நாட்டுக்கு உரிமை இல்லையா? அவரது பட்டப்படிப்பு சான்றிதழ் நகலைப் பார்ப்பது தவறா? என்ன நடந்து கொண்டிருக்கிறது? படிப்பறிவு இல்லாத அல்லது குறைவான படிப்பறிவு கொண்ட ஒரு பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தப்பி ஓடவில்லை; விரைவில் உலகின் முன் தோன்றுவேன்”: தான் தப்பி ஓடவில்லை என்றும் விரைவில் உலகின்முன் தோன்றுவேன் என்றும் பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மத போதகர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகள் காரணமாக அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்ட அம்ரித்பால் சிங், அதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நான் தப்பி ஓடிவிட்டேன். எனது சகாக்களை நான் விட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களின் நினைப்பு தவறு. இது ஒரு மாயை. இதனை உண்மை என்று நம்ப வேண்டாம். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. விரைவில் உலகின் முன் தோன்றுவேன். தனியாக அல்ல; ஆதரவாளர்களோடு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கி தலைவர் ஆகிறார் அமெரிக்க வாழ் இந்தியர்: உலக வங்கியின் தலைவராக அமெரிக்க வாழ் இந்திய சீக்கியரான அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாக இருக்கிறார். மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி: சுவாச பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பாதிப்பு எதுவும் இல்லை. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''போப் பிரான்சிஸ் விரைவாக குணமடையவும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறவும் பிரார்த்திக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
“அந்த புல்லட்டுகள் நீண்ட கால பாதிப்புகளை தந்துள்ளன...” : கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்துள்ள இம்ரான் கான் ‘தி இண்டிபெண்டன்ட்’ பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் தன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் உடலில் நீண்ட கால பாதிப்புகளை தந்துள்ளன என்று கூறியுள்ளார்.