Published : 09 Sep 2017 09:04 PM
Last Updated : 09 Sep 2017 09:04 PM

எம்.ஜி.ஆரின் முழக்கத்தை மெய்ப்பிக்க கட்சியையும் ஆட்சியையும் தொண்டர்கள் ஒன்றிணைந்து கட்டிக்காக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

எம்.ஜி.ஆரின் முழக்கத்தை மெய்யாக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த இயக்கத்தையும், அரசையும் கட்டிக் காக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''எம்.ஜி.ஆரின் பொதுவாழ்க்கையைப் பாராட்டி பல காலங்களில் பல தலைவர்கள் சிறந்த பட்டங்களை வழங்கி அழைத்திருக்கிறார்கள்.1958-ல் முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியன் 'நடிக மன்னர்' என்றும், 1964-ல் நீதிபதி ராஜமன்னார் 'கலை மன்னர்' என்றும், எழுத்தாளர் தமிழ்வாணன் 'மக்கள் திலகம்' என்றும், 1960-ல் நெல்லை மாவட்ட நகராட்சி மன்றம் 'வாத்தியார்' என்றும், விழுப்புரம் முத்தமிழ் மன்றத்தினர் 'கலை அரசர்' என்றும் இன்னும் எத்தனையோ பட்டங்கள் எம்.ஜி.ஆருக்கு கிடைத்திருந்தாலும் 'புரட்சித்தலைவர்' என்ற பட்டமும் 'பொன்மனச் செம்மல்' என்ற பட்டமும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது.

'பொன்மனச் செம்மல்' என்ற அந்த வரலாற்று சிறப்பு மிக்க பட்டத்தை வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். அதனால் தான் வாரியார் பிறந்த இந்த மாவட்டத்திற்கு நன்றி பாராட்டும் விதமாக 1981-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் தனக்கு வழங்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலையை எம்.ஜி.ஆர். வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர். திரை வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் எத்தனையோ வசனங்களை பேசியிருக்கலாம். அவற்றில் பல வசனங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன. ஆனாலும் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தக்கூடிய, அதிமுக தலைவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய, ஒரு வசனம் இந்த வேலூரில்தான் அரங்கேறியது.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, 1979ல் செப்டம்பர் 14-ம் தேதி அண்ணாவின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம் வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள் 'அதிமுகவின் கொடி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உயரத்தில் பறக்கும்' என்று முழங்கினார்.அது எம்.ஜி.ஆரின் சரித்திர முழக்கம்.அவரது முழக்கத்தை மெய்யாக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த இயக்கத்தையும், அரசையும் கட்டிக் காக்கும் விதமாக செயல்பட வேண்டும்.

தமிழகத்திலே ஜெயலலிதா 16 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியைத் தந்தார். எம்.ஜி.ஆர். 11 ஆண்டுகாலம் சிறந்த ஆட்சியை தமிழகத்திற்கு தந்தார். தமிழகத்திலே அதிமுக ஆட்சியின் இருபெரும் தலைவாகள் 27 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்திலே இருந்து பல்வேறு திட்டங்களை ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடியிலே இருக்கின்ற மக்களுக்கு ஏராளமான திட்டங்களை வாரி வழங்கிய அரசு இது.

இருபெரும் தலைவர்களும் விட்டுச்சென்ற பணியை இன்றைக்கு ஜெயலலிதாவின் அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகின்றது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலபேர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றார்கள், ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஜெ. ஆட்சியில் தான் எண்ணிலடங்கா திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.

வேலூர் மாவட்டம் வறண்ட மாவட்டமாக காட்சியளிக்கின்றது. ஆகவே இந்த வறண்ட மாவட்டத்தினை பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்கு, விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான நீர் கிடைப்பதற்கு, வேளாண்பெருமக்கள் என்றென்றைக்கும் வேளாண் தொழில் சிறந்து விளங்க, வேலூர் மாவட்டத்திற்கு பசுமை புரட்சியை உருவாக்கிடும் விதமாக, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு இணைப்புத் திட்டம் உருவாக்குவதற்கு அரசு முயற்சி எடுக்கும்'' என்றார் முதல்வர் பழனிசாமி.

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x