Published : 31 Mar 2023 07:40 AM
Last Updated : 31 Mar 2023 07:40 AM

ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சொத்தில் பங்கு கேட்டு 83 வயது முதியவர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி, அவரது சொத்தில் பங்கு கேட்டு பெங்களூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்திருந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு சட்டப்படியான வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன்ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஜெயலலிதாவின் சகோதரர் என்று கூறி, பெங்களூருவைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன்(83) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் கூறியதாவது:

எனது தந்தை ஆர்.ஜெயராமுக்கு இரு மனைவிகள். முதல் மனைவி ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். இரண்டாவது மனைவி வேதவல்லிக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என இருவர் பிறந்தனர். இந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதர, சகோதரி ஆவார்கள். 1950-ல் எனது தந்தையிடம் ஜீவனாம்சம் கோரி மைசூரு நீதிமன்றத்தில் எனது அம்மா ஜெயம்மா தொடர்ந்தவழக்கில் வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

50 சதவீதம் சொத்து வேண்டும்: ஆனால் அந்த வழக்கு சமரசமாகி விட்டது. ஜெயலலிதாவின் அண்ணன் என்ற முறையில் நான்தான் நேரடி வாரிசு. எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீபா, தீபக் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிஇருந்தார்.

இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால், இதை விசாரணைக்கு ஏற்பது குறித்த விசாரணைசென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளமாஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தீபா, தீபக்குக்கு மாஸ்டர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

இருவரும் பதில் அளிக்காத நிலையில், வழக்கு மீண்டும் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாசுதேவன் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x