

சென்னை: தமிழக காவல் துறையில் 1996-ல் 492 பேர் காவல் உதவி ஆய்வாளர்களாக பணிக்கு சேர்ந்து, 2006-ல் ஆய்வாளர்களாகவும், 2016-ல் துணைக் கண்காணிப்பாளர்களாகவும் பதவி உயர்வு பெற்றனர்.
இவர்களுக்கு 4 ஆண்டுகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய நிலையில், பல்வேறு காரணங்களால் வழங்கப்படவில்லை. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு பணிமூப்பு அடிப்படையில் 32 பேர் கூடுதல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். இந்நிலையில், மேலும் 64 பேருக்கு கூடுதல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த 14 பேருக்கு, கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உளவுப் பிரிவு (நுண்ணறிவு) துணை ஆணையர் சக்திவேல் கொளத்தூருக்கும், சென்னை காவல் நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்த ராமமூர்த்தி நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.