

கோவை: கோவை 26-வது வார்டு முருகன் நகர் பகுதியில், குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் இந்து தமிழ் திசையின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி பதிவில் கூறியிருப்பதாவது: முருகன் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பில்லூர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
சமீபத்தில் சூயஸ் நிறுவனத்தி னர் சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. சிறு தரை பாலங்கள் வழியாகவும் குழாய் பதிக்கப்பட்டது.
வீடுகளுக்கு இன்னும் சூயஸ் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. இப் பணியின்போது, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள வீட்டு குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.
இதனால் சாக்கடை கழிவுநீர் குடிநீர் குழாயில் கலந்து வீடுகளுக்கு செல்கிறது. உரிய நடவடிக்கை மேற்கொள்ள வார்டு கவுன்சிலர் சித்ரா மூலம் மேயரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாயை சுத்தம் செய்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மதிமுக பகுதி கழகச் செயலாளர் வெள்ளியங்கிரி கூறும்போது, “வீட்டு குழாயில் வரும் குடிநீரை, தரை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்தசில நாட்களாக குடிநீர் குழாயில்கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மாநகராட்சி பொறியியல் பிரிவுஅதிகாரிகளிடம் கேட்டபோது,‘‘சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் சரி செய்து, தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும்’’ என்றனர்.