

சென்னை: போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறாததை கண்டித்து, சிஐடியுதொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை, கரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஊக்கத் தொகை, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்புகள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இந்த அறிவிப்புகள் நேற்றுமுன்தினம் மானிய கோரிக்கையில் இடம்பெறாததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும்பெரும்பாலான பணிமனைகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையின் 33 பணிமனைகளிலும் காலை 5மணியளவில் பணிக்குச் செல்லும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ``ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, ஒப்பந்த நிலுவைத் தொகை,கரோனா காலத்தில் பணியாற்றியதற்கு ஊக்கத் தொகை போன்றவற்றை வழங்க அரசு மறுக்கிறது. அதேபோல் ஓய்வூதியர்களுக்கு 90 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வைவழங்க வேண்டும்.
குறிப்பாகதனியார் மய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு சிலபகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்றனர்.
மானியக் கோரிக்கை அறிவிப்புகள் குறித்து போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் ஏஐடியுசி சங்க பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில், ``பேருந்துகளில் சிசிடிவி, கட்டணமில்லா பயண திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடுபோன்றவற்றை வரவேற்கிறோம்.
மேலும், 567 பேருந்துகள் குறைந்தபோதும், கடந்த ஆண்டை விட 4 லட்சம் கிமீ தூரம் பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளன. இதுவே தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்பதற்கான சான்று. காலிப்பணியிடங்கள் நிரப்புதல், பேருந்துகள் வாங்ககூடுதல் நிதி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.