Published : 31 Mar 2023 06:54 AM
Last Updated : 31 Mar 2023 06:54 AM

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் 16 பேர் சென்னை விமான நிலையம் வருகை

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்த தமிழக மீனவர்கள். (உள்படம்) மீனவர்களை சந்திக்க அனுமதி அளிக்காததால், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேரந்த மீனவர்கள் 16 பேர் கடந்த 12-ம் தேதிநடுக்கலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து,இரு படகுகள், மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், 16 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்து, அங்குள்ள இந்திய தூதர அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

அதிகாரிகள் வரவேற்பு: இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட 16 மீனவர்களும் விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் மீனவர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாஜகவினர் வாக்குவாதம்: இதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, அவர்களுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்குவதற்காக பாஜகவினர் வந்திருந்தனர். ஆனால், மீனவர்களை சந்திக்க அதிகாரிகள் அவர்களை அனுமதிக்காமல், 16 பேரையும் வேனில்ஏற்றி, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதையொட்டி, பாஜகவினருக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், காவல் துறையினர் அவர்களை சமரசம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x