Published : 31 Jul 2014 09:00 AM
Last Updated : 31 Jul 2014 09:00 AM

“பாரம்பரியம் மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவது பெருமையாக கருதுகிறேன்” - தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பேச்சு

150 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட பாரம்பரியம் மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற கிடைத்த வாய்ப்புக்காக பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாக தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த சனிக்கிழமை எஸ்.கே.கவுல் பதவியேற்றார். புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியதாவது: கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்றங்களைப் போல சென்னை உயர் நீதிமன்றமும் 150 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே இந்தியர் ஒருவர் முதன் முதலாக உயர் நீதிமன்ற நீதிபதியாக (முத்துசாமி அய்யர்) பணியாற்றியது சென்னையில்தான். அரசு தலைமை வழக்கறிஞராக இந்தியர் ஒருவர் (பாஷ்யம் அய்யங்கார்) முதலில் பணியாற்றியதும் இங்குதான்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் ஒருவர் (பி.வி.ராஜமன்னார்) முதலில் பணியாற்றியதும் சென்னை உயர் நீதிமன்றத்தில்தான். இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கென எத்தனையோ தனிச் சிறப்புகள் உள்ளன. அத்தகைய பாரம்பரியம் கொண்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற கிடைத்த வாய்ப்புக்காக பெருமை அடைகிறேன். இந்த பாரம்பரிய சிறப்புகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் என்பது ஒரு பிரச்சினையாக உள்ளது. தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த காலகட்டத்தில் வழக்காட வரும் பொதுமக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண நாம் முன்னுரிமை அளித்திட வேண்டும்.

நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் முடியாதது என்பது எதுவும் இல்லை. கணினி தொழில்நுட்பத்தை பெருமளவு நாம் பயன்படுத்துவது பல நல்ல தீர்வுகளைத் தரும். முக்கியமான தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பது உட்பட நீதிமன்றத்தின் சில பணிகளில் தனியாரை ஈடுபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

என் மீது உங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நான் பணியாற்றுவேன். நீதி பரிபாலனம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு இருப்பது மிகவும் அவசியம். எனது அலுவலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் எப்போதும் என்னை சந்திக்கலாம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்கச் செய்வோம் என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசினார்.

முன்னதாக தலைமை நீதிபதியை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, “டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்திலும், பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய போதும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை நீதிபதி எஸ்.கே.கவுல் அளித்துள்ளார். பல்வேறு சட்ட துறைகளிலும் மிகுந்த நிபுணத்துவம் உடைய நீதிபதி கவுல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு பயனுள்ள பல நல்ல தீர்ப்புகளை தருவார் என நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஜி.ராஜகோபால், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் கே.ஆர்.தமிழ்மணி, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வி.நளினி மற்றும் சட்ட அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x