

திருநெல்வேலி: குடிநீர், நிழற்குடை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் பயணிகள் தவிக்கின்றனர்.
திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடத்திலுள்ள முக்கிய ரயில் நிலையமான அம்பாசமுத்திரம், மிக முக்கிய கிராஸிங் நிலையமாகவும், அதிக வருவாய் கொடுக்கும் ரயில் நிலையமாகவும் இருந்து வருகிறது. இந்த வழியாக நான்கு ஜோடி விரைவு ரயில்கள், பாலருவி எக்ஸ்பிரஸ், தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கு பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. ரயில் நிலையத்தின் முன்பாக மட்டுமே சிறியளவு நிழற்குடை இருக்கிறது. பிற நடைமேடைகளில் நிழற்குடை வசதிகள் செய்யப்படவில்லை. வெயிலிலும், மழையிலும் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு ரயிலும், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நடைமேடையில் வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு ரயில் நிலையத்தின் முன்பாக இருக்கும் இடத்தில் மட்டும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. அந்த அறிவிப்பு அங்கு நிற்கும் பயணிகளுக்கு மட்டுமே கேட்கிறதே தவிர, நடைமேடைகளில் நிற்கும் பயணிகளுக்கு கேட்பதில்லை. இதனால் ரயில் எந்த நடைமேடையில் வருகிறது என்று தெரியாமல் பயணிகள் குழப்பமடைகின்றனர்.
ரயில் அடுத்த நடைமேடையில் வருவதைக் கண்டு கீழே தண்டவாளத்தில் இறங்கி ஆபத்தை உணராமல் குறுக்கே கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் மேம்பாலம் படிகள்மேல் ஏறி நடக்க முடியாமல் சிரமப்பட்டுச் செல்கின்றனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: ரயில் நிலையம் முழுவதும் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகள் அமைத்து, ரயில் எந்த நடைமேடையில் வருகிறது என்பதை அறிவிக்க வேண்டும். இங்கு கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தற்போது கடும் வெயில் காலம் என்பதால் எல்லா நடைமேடையிலும் குடிதண்ணீர் வசதி அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.