Published : 30 Mar 2023 07:56 PM
Last Updated : 30 Mar 2023 07:56 PM

3,414 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பணப் பலன்களுக்காக ரூ.1031.32 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.32 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக மக்களுக்கான அத்தியாவசிய பேருந்து சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அத்துடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்திற்கெல்லாம் முத்தாய்ப்பாக தமிழ்நாடு அரசின் சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக “மகளிர் கட்டணமில்லா பயணம்” என்ற முத்தான திட்டம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் 7.5.2021 அன்று முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்திடப்பட்டு, சிறப்பாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்படி, முதற்கட்டமாக 1.12.2022 அன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே-2020 முதல் மார்ச்-2021 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள், என மொத்தம் 1,241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடியும்,

இரண்டாம் கட்டமாக, 27.03.2023 அன்று, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஏப்ரல்-2021 முதல் மார்ச்-2022 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.308.45 கோடியும் போக்குவரத்துத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கருணை உள்ளத்தோடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த பணிபுரிந்து ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.32 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x