

புதுச்சேரி: விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் விவரம்: "நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கான ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. விவசாயிகளுக்கு நீண்ட நாட்களாக ஒரு பிரச்சினை இருந்தது.
முதல்வர், ஆளுநர் ஒப்புதல் படி நிலத்தடி நீரை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையை புதுச்சேரியில் செயல்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதன்படி விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.
அதேபோல் ஒரு ஆழ்துளை கிணறுக்கும், மற்றொரு கிணறுக்கும் இடையில் இடைவெளி தேவையில்லை. அதற்கு கட்டுப்பாடு இல்லை. ஆழ்துளை கிணறு அமைத்தவுடன் நிலத்தடி நீர் அதிகார அமைப்பில் கட்டணமில்லாமல் பதிவு செய்து, அச்சான்றிதழை வைத்து மின் இணைப்பு பெறலாம்.
ஆழ்குழாய் கிணறு அமைக்க பிவிசி பைப்புக்கான மானியம் பெற, வேளாண்துறைக்கு தெரிவித்து அவர்கள் மேற்பார்வையில் அமைக்கலாம். இது விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்." என்று அமைச்சர் கூறினார்.