சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்கவும்: அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் வாயிலாக சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் போராட்டத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "சுகாதாரத்துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்; பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஏப்ரல் 3ம் நாள் உண்ணா நிலை போராட்டம் அறிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை.

விடுபட்டு போன 1002 முதல் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்; 2715 இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழக நலன் கருதி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவை ஆகும்.

தமிழகத்தில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும், நோய்த் தடுப்பு குறித்த ஆராய்ச்சிகளிலும் சுகாதார ஆய்வாளர்களின் பணி மிகவும் முதன்மையானது. புதிய நோய்கள் உருவாகி வரும் நிலையில் சுகாதார ஆய்வாளர்களின் பணிக்கு தமிழக அரசு உரிய மரியாதை வழங்க வேண்டும்.

சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் வாயிலாக அவர்கள் வரும் 3ம் நாள் மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in