Published : 30 Mar 2023 06:21 AM
Last Updated : 30 Mar 2023 06:21 AM
சென்னை: ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்புக்கு எதிராக தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி பதவி பறிப்பு, அதானி விவகாரம் குறித்து நாடு முழுவதும் ஒரு மாதகால தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி பாஜக ஆட்சியை எதிர்த்து 'பாஜகவின் ஜனநாயக படுகொலை'என்ற தலைப்பில் பிரச்சார கையேடுமார்ச் 31-ம் தேதி வெளியிடப்படும்.
ஏப்.3-ம் தேதி, சென்னையில் அம்பேத்கர் அல்லது காந்தி சிலைமுன்பு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி,பிற்படுத்தப்பட்டோர் துறை, சிறுபான்மைத்துறை சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும். அன்றே இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸ், இதர துறைகள் சார்பில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெறும். மகளிர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பெருந்திரளான மகளிர் காங்கிர ஸார் பங்கேற்பார்கள்.
ஏப்.15 முதல் 20-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அதில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் மாவட்ட அளவில், வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும்.
ஏப்ரல் 2-வது வாரத்தில் டெல்லியில் நடைபெறும் ஜெய் பாரத் மகா சத்யாகிரக போராட்டத்தில் தமிழக காங்கிரஸார் பெருந்திரளாக பங்கேற்பர். தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில அளவில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெறும். அதில் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள்.
தமிழகத்தில் ஆருத்ரா நிதி நிறுவன ஊழலுக்கு பின்னால் தமிழக பாஜக உள்ளது. அது தொடர்பான விசாரணையை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். ஏமாற்றுக்காரர்கள், சமூக விரோதிகள், குற்றவாளிகள்தான் பாஜகவில் சேர்கின்றனர்.
பிரதமர் வெளிநாடு செல்லும்போது, அதானி உடன் செல்கிறார். பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு அதானி செல்கிறார். அந்நாடுகளில் தொழில் முதலீடுகள் அதானிக்கே வழங்கப்படுகிறது. அவர் ராணுவம் சார்ந்த பணிகளை மேற்கொள்கிறார்.
அப்பணியில் சீனர்களுடன் இணைந்து செயல்படுகிறார். இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளது. இதை எல்லாம் மக்களவையில் ராகுல்காந்தி பேசுவார் என்பதற்காகவே அவரது எம்பி பதவி பறிக் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT