

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் பாசனப் பகுதிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் ஆகியோரின் பேட்டியுடன் 'இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ராஜ வாய்க்காலை புனரமைத்து மேம்படுத்தும் பணி ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசின் நீர்வளத் துறை மானியக் கோரிக்கையில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்எல்ஏ காடு வெட்டி ந.தியாகராஜன் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியது: இந்த கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நீர்வளத் துறை மானியக் கோரிக்கையில் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டிருந்தேன். வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், 'இந்து தமிழ் திசை' நாளிதழில் இதுதொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நீர்வளத்துறை ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள மானியக் கோரிக்கையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணலுக்குப் பதிலாக கான்கிரீட்டில் சிறு படுக்கை அணை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 29 ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கை 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வாயிலாக முடிவுக்கு வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும், வெள்ளக்காலங்களில் காவிரியில் வீணாகி வரும் உபரிநீரை நீரேற்று பாசனம் மூலம் நாகையநல்லூர் உள்ளிட்ட 4 ஏரிகளுக்கு கொண்டு சென்றால், அதன்மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். அந்த திட்டத்துக்கும் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதற்கு உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.