Published : 30 Mar 2023 07:20 AM
Last Updated : 30 Mar 2023 07:20 AM

நலிவுற்ற முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்: ஏப்.19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: நலிந்த நிலையில் உள்ள சென்னையை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள், ஓய்வூதிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஒய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆணையத்தின் ‘www.sdt.tn.gov.in’ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெற, சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, முதலிடம், 2 மற்றும் 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய அளவிலான போட்டிகள்: குறிப்பாக, மத்திய அரசால்நடத்தப்பட்ட தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், தேசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகள், இந்தியஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த ஆண்டு ஜனவரியில் 58 வயது பூர்த்தியடைந்தவராகவும், தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழகம் சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருவாய் ரூ.15 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஒய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடையாது. முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பெற்றி பெற்றவர்கள் இதில் ஓய்வூதியம் பெற இயலாது. இந்த ஓய்வூதியம் பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வரும் ஏப்.19-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x