Published : 30 Mar 2023 06:08 AM
Last Updated : 30 Mar 2023 06:08 AM

அவுட்சோர்சிங் நியமனம் குறித்த அமைச்சரின் பேச்சுக்கு தலைமைச் செயலக சங்கம் கண்டனம்

சென்னை: சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள் குறித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு தலைமைச் செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், செயலர் சு.ஹரிசங்கர் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27-ம் தேதி, மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை எண்.115 குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிடும்போது, ‘‘அரசில் தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என கூறினோம்.

தற்காலிகமாக இருப்போர் ரூ.5,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். ஆனால், முழு நேர பணியாளர்களோ பல லட்சம் ஊதியம் பெறுகின்றனர். இது நியாயமல்ல. அதனால், அடிப்படை அவுட்சோர்சிங்கிற்கு ஒரு தரத்தை நிர்ணயித்து, பிஎப், இஎஸ்ஐயில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அரசாணையை கொண்டு வந்தோம். அதைஎதிர்க்கிறார்கள்’’ என தெரிவித்தார்.

அந்த அரசாணை, ஒப்பந்த முறையில் நியமனம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு, 69 சதவீத இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கு எதிராக இருப்பதாலேயே முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு ஊழியர் மீதான தனதுவெறுப்பை அமைச்சர் வெளிக்காட்டியுள்ளார்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 25 ஆண்டுகள் கழித்தேலட்சத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும், 12 லட்சம் அரசு ஊழியர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே லட்சத்தில் சம்பளம் பெறுகின்றனர். ஏதோஅனைத்து பணியாளர்களும் சுகபோகிகளாக இருப்பதுபோல் அமைச்சர் உருவகப்படுத்துகிறார். 3.5 லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்ற திமுக வாக்குறுதிக்கு மாறாக, அவற்றை தனியார் மூலம் நிரப்புவதுதான் அமைச்சரின் நோக்கமா?

இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்வதோடு, அரசுக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குமான நல்லுறவை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசின் அங்கமான ஊழியர்களின் உணர்வுகளையும், உழைக்கும்மக்களின் வாழ்நிலையையும் கொச்சைப்படுத்தும் வகையிலான மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரின் உரைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

ஜனநாயகத்துக்கும், அரசமைப்பு சட்டகோட்பாடுகளுக்கும் எதிரான அந்த உரையை உடனடியாக திரும்ப பெறுவதோடு, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம்’ என கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x