Last Updated : 12 Sep, 2017 06:41 PM

 

Published : 12 Sep 2017 06:41 PM
Last Updated : 12 Sep 2017 06:41 PM

புதிய வாகனங்களைப் பதிவு செய்ய ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய வாகனங்களைப் பதிவு செய்ய ஓட்டுநர் உரிமம் அவசியம் என்ற தமிழக அரசின் சமீபத்திய உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு இது தொடர்பாக செய்திருந்த எதிர் மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி. வாகனப் பதிவுக்கு ஓட்டுநர் உரிமம் அவசியம் என்ற தமிழக அரசின் சமீபத்திய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

தமிழக போக்குவரத்து ஆணையர் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வண்டி உரிமையாளர்கள் முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால்தான் வாகனப் பதிவு மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதாவது சாலை விபத்துகள் கடுமையாக அதிகரித்ததையடுத்து வாகனங்கள் வாங்கும்போதே உரிமம் அவசியம் என்று வடிகட்டலாம் என்று தமிழக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்தச் சுற்றறிக்கை மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 5-ஐ சுட்டிக் காட்டி, ஓட்டுநர் உரிமம் இல்லாதவருக்கு வாகனங்களை விற்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.

மேலும், உரிமம் இல்லாதவருக்கு வாகனங்களை விற்றால் டீலர் சட்டத்தை மீறுபவராகிறார், இதற்கு சிறைத் தண்டனை, அபராதம் வரை உண்டு என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து ஆட்டோமொபைல் டீலர்கள் தங்கள் மனுவில், இது சட்டப்படி தக்கவைக்க முடியாதது, இது வர்த்தகர்களை பெரிதும் பாதிக்கும் என்று முறையிட்டனர்.

மேலும் வாகனம் வாங்குவோர் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது சட்ட ரீதியானதல்ல. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். இதனையடுத்து நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x