Published : 30 Mar 2023 06:00 AM
Last Updated : 30 Mar 2023 06:00 AM
வேலூர்: வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் கடந்த 27-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு தப்பினர். இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பியவர்களை பிடிக்க 3 தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு இல்லத்தின் ‘ஏ’ தொகுதியில் அடைக்கப்பட்ட சிறுவர்களில் சிலர் நேற்று முன்தினம் ரகளையில் ஈடுபட்ட துடன், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக 12 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லத் தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் அடுத்தடுத்த சம்பவங்கள் பதற்றமான சூழலாக மாறியுள்ளது.
இந்த விவகா ரத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலத்துறை முதன்மை செயலாளர் சுன் சோங்கம் ஜடக், இயக்குநர் அமர் குஷ்வாஹா ஆகியோர் நேற்று வருகை தந்தனர். அங்கு, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகாரி களுடன் அரசினர் பாதுகாப்பு இல்லம் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக செய்தி யாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கீதா ஜீவன் கூறும்போது, ‘‘வேலூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியுள்ளனர். மற்ற சிறுவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்பட்டு பணியாளர்களை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இதில், ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இது போன்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க என்ன செய்வது என ஆலோசித்தோம்.
மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகின் தலைவராக ஆட்சியர் இருப்பதால் அவர் நேரில் பார்வையிட்டு எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அறிக்கையாக அளிக்க அறிவுரை வழங்கியுள்ளோம்.
பாதுகாப்பு இல்லத்தில் உள்ள பொருட்களை உடைத்து அதை ஆயுதமாக பயன்படுத்துவதால் அங்குள்ள பணியாளர்கள் பாதிக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, கூடுதல் ஆட்களை நியமிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளது. ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து எப்படியாவது சாதித்துக்கொள்ள முடியுமா? என சிறுவர்கள் யோசிக்கிறார்கள். அவ்வாறு எல்லாம் செய்ய முடியாது.
சிறுவர் இல்லத்தில் தகராறு ஏற்பட்ட நாளில் நல்லெண்ண அடிப்படையில் ஆற்றுப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வெளியில் இருந்து பிரியாணி வாங்கி கொடுக் கப்பட்டுள்ளது. பாதுகாவலர்களுக்கு அச்சம் இருந்தால் எதற்காக இந்த வேலைக்கு வருகிறார்கள். அவர்களின் குறைகள் சரி செய்யப் படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT