ராமநவமி | ராம ரத யாத்திரை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

ராமநவமி | ராம ரத யாத்திரை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

சென்னை: ராமநவமி நாளை 'ராமனின் ரத யாத்திரை' என்ற பெயரில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யபட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரத் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராம நவமி நாளான, நாளை (மார்ச் 30) சென்னை மண்ணடியில் இருந்து என்எஸ்சி போஸ் சாலை வழியாக 'ராமனின் ரத யாத்திரை' என்கிற பெயரில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக் கோரி காவல் துறையிடம் மனு அளித்தோம். இந்த மனுவை காவல் துறை நிராகரித்துவிட்டது. எனவே, ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான, அரசு குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ், "மனுதாரர் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியுள்ள இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. மேலும், அந்தப் பகுதியில், மசூதி மற்றும் தேவாலயங்கள் அமைத்துள்ளன. அந்தப் பகுதியில், ஊர்வலம் நடத்தினால் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கக்கூடும். எனவேதான், காவல் துறை ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுவை நிராகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2015-ம் ஆண்டு இதுபோன்ற ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய காவல் துறையின் நகலை தரும்படி கூறினார். ஆனால், எந்தவித நகலும் மனுதாரர் தரப்பில் வழங்கப்படவில்லை.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் காவல் துறை தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in