

புதுச்சேரி: சிறுதானிய ஆண்டு என்பதால் புதுச்சேரி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு, சோளத்தில் மானிய விலையில் வழங்கப்படும் என அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக் குமார் பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள்: "குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டு சேவைகளுக்கு பிரத்யேகமாக மத்திய அரசின் பொது சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. அந்தந்த பகுதிகளில் பெறலாம். கணினி மயமாகப்பட்டு ஆன்லைன் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. சேவைகள் துரிதப்படுத்தப்படும்.
ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு புதிய திட்டப்படி இலவச அரிசி, மானிய சர்க்கரை, சிறுதானியங்கள் தரப்படும். சிறுதானிய ஆண்டு என்பதால் கம்பு, கேழ்வரகு, சோளத்தில் மானிய விலையில் ரேஷனில் தரப்படும் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் மக்கள் குறைகளை கேட்க கால் சென்டர் இந்தாண்டு அமைக்கப்படும். மாவட்ட, மாநில நுகர்வோர் குறைதீர் மையம் அமைக்கப்படும். இதற்கு லாஸ்பேட்டையில் நவீன கட்டடம் கட்டப்படும்.
விஜயன் கமிட்டியானது, பாப்ஸ்கோவை மறுசீரமைக்க பரிந்துரைத்தது. அதன்படி பாப்ஸ்கோவிடம் உள்ள 33 பார் வசதிகளுடன் கூடிய சில்லரை மதுபானக் கடைகளை தனித் தனியாக தனியாருக்கு தருவதை விட ஒருவருக்கே, 33 கடைகளை 20 ஆண்டுகளுக்கு வழங்க ரூ. 150 கோடி டெ பாசிட் பெறப்பட்டு டெண்டர் விட முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.
அவர், உயர் மட்டக்குழு அமைத்து கருத்து கேட்டுள்ளார். கருத்துப்படி ஆவணம் செய்யப்படும். தீயணைப்புத் துறையில் 58 பதவிகள் உருவாக்கப்படும். அதில் 12 நிலை அலுவலர்கள் 5 உயர் அதிகாரிகள் என நேரடியாக நியமிக்கப்படுவார்கள். 19 பெண் தீயணைப்பு வீரர்கள் , ஒரு பெண் தீயணைப்பு நிலைய அதிகாரி நியமிக்கப்படவுள்ளனர். புதுச்சேரி, வில்லியனூர், தவளக்குப்பம், திருமலை ராயப்பட்டினத்தில் தீயணைப்பு நிலையங்களுக்கு கட்டடங்கள் கட்டப்படும்.
அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ. 10 கோடியில் வாகனங்கள் வாங்கப்படும். கோட்ட தீயணைப்பு அதிகாரி புதிய கட்டடம் கோரி மேட்டில் கட்டப்படும். நிரந்தர தீயணைப்புப் பயிற்சி மையம் அமைக்கப்படும். மனிதர் செல்ல முடியாத இடங்களுக்கு புதிய கிரேன் வாங்கப்படும். 4263 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25 கோடி மத்திய அரசிடம் பெற்று ரூ. 17. 5 கோடி கடன் தரப்பட்டுள்ளது.
814 புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 குழுக்கள் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது. தலா ரூ.15 ஆயிரம் சுழல் நிதி தரப்பட்டது" என அமைச்சர் கூறினார்.
அதையடுத்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸார் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் எழுந்து, குடிமைப் பொருள் வழங்கல் துறையில் எதிர்ப்பு தெரிவித்த அதிகாரியை மீண்டும் அங்கு பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் எழுந்தது. இதையடுத்து அந்த துணை இயக்குநர் அதிகாரியை உடன் மாற்றுவதாக அமைச்சர் சாய் சரவணன் குமார் உறுதி தந்தார்.