

புதுச்சேரி: காரைக்காலில் 30 ஆயிரம் சதுர அடியில் ரூ.15 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை தொடங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவச கல்விக்கு அரசாணை வெளியிடப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் இன்று பேசியதாவது: "சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள் ஊதியம் ரூ. 6 ஆயிரம் வாங்கி வந்தனர். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தரப்படும். காரைக்காலில் 30 ஆயிரம் சதுர அடி 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை ரூ. 15 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படும். வருவாய்த்துறையில் தினக்கூலி ஊதியம் உயர்த்தப்படும்.
எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவசக் கல்வி என அறிவித்தோம். சென்டாக் மூலம் மட்டுமில்லாமல், இதர வழிகளிலும் படிக்கும் அனைவருக்கும் நிதி தரப்படும். சிறப்புக் கூறு நிதியில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செய்வோம். அரசாணை வெளியிடப்படும். கல்வித் துறையில் ரொட்டி, பால் ஊழியர்களுக்கும் ஊதியம் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி தரப்படும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிறைய கேட்கிறீர்கள். எதிர்பார்த்ததை விட அதிகம் செய்கிறோம். ஊழியர்களுக்கு அறிவுரை தர வேண்டும். பணியாளர்களுக்கு வாங்கும் ஊதியத்துக்கு வேலை செய்யும் எண்ணம் இருக்க வேண்டும். மற்றவர்களைக் குறை கூறி உட்கார்ந்திருக்கக்கூடாது. துறையில் பணியாற்றுவோருக்கு செய்வது ஒரு விதம். அதே நேரத்தில் அரசு உதவி பெறும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.
கார்ப்பரேஷன்களுக்கு முதலீட்டை வைத்து உதவுவது அவசியம். ஏன் இந்த நிலைக்கு அரசு சார்பு நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள் மாறியது என்பதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. பல நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை ஊதியம் இல்லை என்று கேட்கிறார்கள். எப்படி செய்ய முடியும். ஓரளவுதான் அரசு நேரடியாக செய்ய முடியும். மொத்தமாக ரூ. 150 கோடி எப்படி தரமுடியும். எந்த நிதியில் இருந்து செய்ய முடியும்.
தனது நிலையை உணர்ந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். ஓரளவுதான் மானியம் தர முடியும். இன்றைய காலக்கட்டத்தில் போராட்டம் செய்கிறார்கள். செய்தித்தாள் மூலம் பார்க்கிறோம். பொறுப்பை உணராததால்தான் இந்த சிரமம். எப்படி செய்ய முடியும்- குழு வைத்து ஆராய்ந்தாலும் ஒத்துழைப்பில்லை. சரியான போராட்டமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசு ஓரளவுதான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். நிலையை உணர முடியாததால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையை சரி செய்யப் போகிறோம். தனியாருடன் இணைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கிறோம். நிதியை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.