Published : 12 Sep 2017 04:10 PM
Last Updated : 12 Sep 2017 04:10 PM

பேனர்களை அகற்றக்கோரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி

அதிமுக பொதுக்குழுவை ஒட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுதும் வானகரம் திருமண மண்டபம் வரை நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்றவேண்டும் என டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதற்காக அதிமுகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் வானகரம் திருமண மண்டபம் வரை சாலையின் இருபுறமும் பேனர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்பாக்கம் அருகே டிராபிக் ராமசாமி பேனர்களை அகற்ற வேண்டும் என போராட்டத்தில் குதித்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

ஆனால் பேனர்களை அகற்றித்தான் ஆகவேண்டும் என டிராபிக் ராமசாமி பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றினர். வழி நெடுக உள்ள பேனர்களை அகற்றும்படி டிராபிக் ராமசாமி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழி நெடுக உள்ள பேனர்களை போலீசாரும், மாநகராட்சியினரும் அகற்றினர்.

சமீபத்தில் வண்டலூரில் நடத்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது ஜி.எஸ்.டி சாலை முழுவதும் பேனர்களை கட்டி வைத்ததால் பொதுமக்கள் சாலையில் நடப்பதற்கு கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x