Published : 29 Mar 2023 06:22 AM
Last Updated : 29 Mar 2023 06:22 AM
சென்னை: தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவும், உணவு உற்பத்தியும் அதிகரித்துள்ளன. வேளாண் திட்டங்களால் 80 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறுகின்றன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, துறைஅமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று பதில் அளித்து பேசியதாவது: வேளாண்மை துறைக்கென 3-வது முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராட்டியிருப்பது சிறப்பு.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களால் சுமார் 80 லட்சம்விவசாய குடும்பங்கள் பயன்பெறுகின்றன. இதற்காக விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு நன்றி. இலவச மின்சாரத்தால் மட்டும் 23 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த 22 மாதங்களில் 1.96 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. 1.20 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11.73 லட்சம் டன் அதிகம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.98 கோடி நிவாரணமும், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.116 கோடி நிவாரணமும் வழங்கப்பட்டது.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கரும்பு சாகுபடி பரப்பு 2.25 லட்சம்ஹெக்டேராக இருந்தது. கடந்த 10ஆண்டுகளில் இது குறைந்தது. தற்போது அரசு எடுத்த நடவடிக்கைகளால் 1.50 லட்சம் ஹெக்டேரில்கூடுதலாக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
பேரவைத் தலைவர் அப்பாவு ஆண்டுக்கு 1 லட்சம் பனைவிதைகளை வழங்குகிறார். பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுபோன்ற உணர்வு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது:
நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஆரூரான் சர்க்கரை ஆலைஉரிமையாளர், விவசாயிகள் மீதுரூ.210 கோடி கடன் வாங்கிவிட்டு,ஆலையை விற்றுவிட்டார். அந்தவிவசாயிகளை கடன் சுமையில் இருந்து அரசு விடுவிக்க வேண்டும். 120 நாட்களாக போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு முதல்வர் முடிவு கட்ட வேண்டும்.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): பண்ருட்டி தொகுதியில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும்.
ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): கரும்பு பயிரை மஞ்சள் நோய் தாக்குவதால் கரும்பு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்): தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள், எண்ணெய் வளங்களை அரசுடமையாக்கி, உபரி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
சிந்தனைச் செல்வன் (விசிக): வறுமைக் கோட்டுக்கான வரையறை 20 ஆண்டுகளுக்கு முந்தைய தரவுகள் அடிப்படையில் உள்ளது. இதை மறு கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
ஈஸ்வரன் (கொமதேக): கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெற்று தர வேண்டும்.
ஜி.கே.மணி (பாமக): அனைத்து நிலங்களிலும் மண்வள பரிசோதனை செய்ய வேண்டும். எல்லாஏரிகளிலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். எல்லா நியாயவிலை கடைகளிலும் சிறுதானியங்கள் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
உறுப்பினர்கள் ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), விஜயதாரணி (காங்கிரஸ்) ஆகியோரும் கருத்துகளை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT