Published : 29 Mar 2023 06:15 AM
Last Updated : 29 Mar 2023 06:15 AM
சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பித்தால் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடனுதவியை விரைவில் வழங்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டம் நடத்த கட்டிட வசதி செய்து தரப்படுமா? என்று பென்னாகரம் தொகுதி உறுப்பினரும், சட்டப்பேரவை பாமக கட்சி தலைவருமான ஜி.கே.மணி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் சுய.உதவிக் குழுக்கள் நேரடி வங்கிக்கடன் பெற குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை என 6 மாதங்களுக்கு தொடர்ந்து கூட்டம் நடத்தி,சேமிப்பு செய்து, உள்கடன் வழங்கி, குறித்த காலத்தில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தி, கணக்குபுத்தகத்தை முறைப்படி செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
அத்தகைய குழுக்களுக்கு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பத்தின் அடிப்படையில் உடனடியாக கடன் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை ஆய்வு செய்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் குழுக்களின் வங்கிக்கணக்குக்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது.
அதற்கு மேல் நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களால், வங்கியாளர்கள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த 2022-23-ம் நிதியாண்டில் எங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.25 ஆயிரம் கோடி இலக்கைவிட அதிகமாக ரூ.25,022.19 கோடி கடன் வழங்கியுள்ளோம். இதன்மூலம், 4.39 லட்சம் சுய உதவிக்குழுக்கள் பயனடைந்துள்ளன.
இந்தாண்டு 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்இணைப்பு இலக்கு ரூ.30 ஆயிரம்கோடியாக முதல்வர் வழங்கியுள்ளார். இந்தாண்டும் அதைவிட அதிகமாக கடன் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 12,116 கிராமஊராட்சிகளில் 1,260 சதுரஅடி பரப்பில் ஒரு இ-சேவை மையம், ஒரு வைப்பறை, கழிவறை என 3 அறைகள் கொண்ட கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடங்கள் உள்ளன. கூடுதலாக 12,161 கிராம ஊராட்சிகளில் 350 சதுரஅடியில் சுய உதவிக்குழுக்கள் மட்டுமேபயன்படுத்தும் வகையில் பிரத்யேககட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு கட்டிடங்களும் சுயஉதவிக் குழுக்களின் கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT