

ராமேசுவரம்: கச்சத்தீவில் கடற்படை வீரர்களின் வழிபாட்டுக்காக புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் அங்கு இல்லை என இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
இந்திய-இலங்கை நாட்டு மக்களின் சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் 2 புத்தர் சிலைகளை திடீரென நிறுவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்தனை ஆண்டு காலமாக கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்து வந்தநிலையில், கச்சத்தீவில் பிற மதத்தினரும் ஆலயங்களை நிறுவி வழிபடத் தொடங்கினால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படுவதுடன் மத மோதல்களும் ஏற்படும், 2 நாட்டு மக்களிடையேயான சுமுக உறவைப் பாதிக்கும் எனவும் இந்த புத்தர் சிலைகளை உடனே அகற்ற வேண்டும் எனவும் இந்திய-இலங்கையைச் சேர்ந்த பல்வேறு அமைப்பிரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சத்தீவு மக்கள் வசிக்காத தீவாகும். இங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை கடற்படையின் முகாம் அமைந்துள்ளது. மேலும் பாதுகாப்புப் பணிகள் மட்டுமின்றி கச்சத்தீவில் கடற்படையினர் அந்தோணியார் தேவாலயத்தையும் பாதுகாத்து வருகின்றனர்.
புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவைத் தவிர மற்ற நாட்களில் தேவாலயம் தினமும் சுத்தம் செய்யப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு இலங்கை கடற்படையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நிரந்தர கட்டுமானம் கிடையாது: இங்கு பணிபுரியும் கடற்படையினரில் பெரும்பான்மையானோர் பவுத்தர்கள் என்பதால் அவர்களின் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக சிறிய புத்தர் சிலைகள் கச்சத்தீவு கடற்படை முகாம் அருகே வைத்து மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்தோணியார் தேவாலயத்தைத் தவிர கச்சத்தீவில் வேறு எந்த நிரந்தரக் கட்டுமானமும் மேற்கொள்ள முடியாது.
வேறு எந்த மத வழிப்பாட்டுத் தலமும் இல்லை. எதிர்காலத்தில் எந்தவொரு புத்தர் விகாரையும் நிர்மாணிக்கும் முயற்சிகளும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.