

சென்னை: சொத்து வரி 5 ஆண்டுகளாக செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால், 20 சதவீதம் வரை வரி சலுகைவழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். இதனை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சியில் நேற்று தீர்மானம் இயற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சிமேயர் ஆர்.பிரியா நேற்றுமுன்தினம் மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்நேற்று நடைபெற்றது.
மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக44,436 சொத்துடமைதாரர்கள் ரூ.245கோடி வரி நிலுவை வைத்துள்ளனர். இதில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் மாநகராட்சிக்கு வரி நிலுவைத் தொகை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது.
இதன் காரணமாக, ஒரு முறைசிறப்பு நிகழ்வாக, 5 ஆண்டுகளுக்குமேலாக சொத்து வரி நிலுவைத்தொகை வைத்துள்ளவர்கள் 3 மாதகாலத்துக்கு நிலுவைத் தொகைசெலுத்தினால் 20 சதவீதம் வரைவரிச் சலுகை வழங்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு அரசாணைவெளியிட வலியுறுத்த வேண்டும்.
அதிமுக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை, திமுக முன்னாள் வழக்கறிஞர் வி.பி.ராமன் சாலை என பகுதியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
எழும்பூர் மருத்துவமனையில்இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.5.89 கோடி செலவில் காத்திருக்கும் அறை, உணவு விடுதி உள்ளிட்டபல்நோக்கு கூடம் கட்ட வேண்டும்.
வேலங்காடு மயானத்தில் அரசு தனியார் பங்களிப்பு திட்டத்தின்கீழ் இறந்தோர் உடலை வைத்திருக்க பிணவறை அமைக்கப்படும் உள்ளிட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பட்ஜெட் மீதானவிவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசியதாவது:
விஸ்வநாதன், நிலைக்குழு தலைவர் (கல்வி) : மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள 327 பூங்காக்களை பராமரிக்கும் பொறுப்பு கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. இதனால், மாநகராட்சிக்கு ரூ.3.27 கோடி இழப்பு ஏற்பட்டது.
ரேணுகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: பட்ஜெட்டில் கடனுக்கான வட்டித் தொகை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் தொகை விவரம் இடம் பெறவில்லை. மாமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறாதது வருத்தமாக உள்ளது.
உமா ஆனந்த், பாஜக: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ரிப்பன் மாளிகையில் பழம்பெரும் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கண்காட்சி அமைக்கவேண்டும்.
ஜீவன், மதிமுக: பெரம்பூர் ஆட்டிறைச்சிக் கூடம் நவீனப்படுத்தப்படும்போது, அங்கு தோல் பதனிடும் வசதி செய்ய வேண்டும். இதன்மூலம், அங்கு ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபட்டு பாதிப்படைந்தவர்கள் பயன் அடைவர். இந்த பட்ஜெட் விவாத்தின் மீது உறுப்பினர்கள் 36 பேர் பங்கேற்று பேசினர்.