

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் விசாரணை கமிஷன் தலைவர் நீதியரசர் ரெகுபதி வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் நேரில் ஆய்வு நடத்தினார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாரணை கமிஷனில் முறையிடலாம் என்று அவர் கூறினார்.
சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கடந்த ஜூன் 28-ம் தேதி இடிந்து தரைமட்டமானதில் 61 பேர் பலியாயினர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தென் இந்தியாவில் அதிக உயிர்களை பலிவாங்கிய கட்டிட விபத்து என்பதால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்நிலையில், மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்த இடத்துக்கு விசாரணை கமிஷன் தலைவர் நீதியரசர் ரெகுபதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வந்தார். சம்பவ இடத்தில் ஒரு மணி நேரம் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். கட்டிடம் இடிந்தபோது நடந்த சம்பவங்கள் பற்றிய விவரங்களை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 10 மணி அளவில் ஆய்வை முடித்துக்கொண்டு வெளியே வந்தார்.
கட்டிடம் இடிந்த இடத்தின் அருகே வசிப்பவர்கள் அவரிடம் ஒரு மனு கொடுத்தனர். ‘‘சம்பவம் நடந்த பிறகு பாதுகாப்பு இல்லாத சூழலில்தான் வாழ்கிறோம். தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள மற்றொரு 11 மாடி கட்டிடமும் இடிந்து விழுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இங்கிருந்து 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டை காலி செய்து வேறு இடங்களுக்கு போய்விட்டன. 11 மாடி இடிந்து விழுந்ததில் அருகே இருந்த 3 வீடுகள் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டன. பாதிக்கப் பட்ட எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தனர். அதை படித்துப் பார்த்த ரெகுபதி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் ரெகுபதி கூறும்போது, ‘‘11 மாடி கட்டிடம் இடிந்தது பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படும். 2 மாதங்களில் விசாரணை முடிந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாரணை கமிஷன் முன்பு முறையிடலாம்’’ என்றார்.
மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை நீதிபதி ரெகுபதி பார்வையிட்டார். உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள்.