Published : 29 Mar 2023 06:20 AM
Last Updated : 29 Mar 2023 06:20 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தற்போது 90 சதவீத குளங்கள் வறண்டுள்ளன. அணை களில் 19 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை நெருங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்கிறது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்துள்ளது. மாவட்டத்திலுள்ள அணைகளில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது.
மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12,882 மில்லியன் கனஅடியாகும். தற்போது 2,510.34 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 5,357.52 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. மொத்தமாக அணைகளில் தற்போது 19.48 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 41.58 சதவீதம் தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டைவிட தற்போது 22.10 சதவீதம் நீர் இருப்பு குறைவாக இருக்கிறது.
6 அணைகளிலும் தற்போதைய நீர்மட்டம் (அடைப்புக்குள் கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம்): பாபநாசம்- 22.60அடி (70.05 அடி), சேர்வலார்- 42.39 (80.45), மணிமுத்தாறு- 79.30 (93.90), வடக்கு பச்சையாறு- 6.75 (29.5 ), நம்பியாறு- 12.49 (16.79), கொடுமுடி யாறு- 9 (18.75).
திருநெல்வேலி மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு 814.8 மி.மீ. நடப்பு மார்ச் மாதம் வரை பெற வேண்டிய வளமான மழையளவு 121.7 மி.மீ. ஆகும். ஆனால் இதுவரை 58.88 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. இயல்பைவிட குறைந்த அளவுக்கே மழை பெய்துள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள நீராதாரங்களில் கவலை அளிக்கும் வகையில் நீர் இருப்பு உள்ளது.
மாவட்டத்தில் 781 கால்வரத்து குளங்கள், 316 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் 1,097 குளங்கள் உள்ளன. இதில் 691 கால்வரத்து குளங்களும், 242 மானாவாரி குளங்களுமாக மொத்தம் 933 குளங்கள் வறண்டுள்ளன.
கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. பெரும்பாலான குளங்களும், கிணறுகளும் வறண்டுள்ளதால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கும் அபாயம் இருக்கிறது.
மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் கார் பருவத்தில் 7,700 ஹெக்டேர், பிசான பருவத்தில் 27,200 ஹெக்டேர், கோடை பருவத்தில் 8,100 ஹெக்டேர் என்று மொத்தம் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது வரை 34,663 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 52,612 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றிருந்தது. இவ்வாண்டு நெல் சாகுபடி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17,949 ஹெக்டேர் குறைந்திருக்கிறது.
மொத்தமாக மாவட்டத்தில் 55,371 ஹெக்டேரில் பலவகை பயிர்கள் சாகுபடி இலக்கில் இதுவரை 45,038 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் 62,590 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றிருந்ததாக வேளாண்மைத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT