Published : 29 Mar 2023 06:17 AM
Last Updated : 29 Mar 2023 06:17 AM

நாகர்கோவில் | டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்வேகமான பேச்சால் பப்ஜி விளையாட்டை கைவிட்ட சிறுவனுக்கு சைக்கிள் பரிசு

நாகர்கோவில்: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதளத்தில் உத்வேகம் அளிக்கும் விதமாக பேசியதை பார்த்து பப்ஜி விளையாட்டை கைவிட்ட சிறுவனுக்கு டிஜிபியால் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறை சேர்ந்தவர் ரஹ்மத் மீரா. இவர், மணிமுத்தாறு ஆயுதப் படை வளாகத்தில் ஒப்பந்த அடிப் படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் கரோனா பாதித்த காலத்தில் தனது மகன் உவேஷ் அல்தாப் (13) மற்றும் குழந்தை களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதை பயன்படுத்தி தனது மகன் ஆன்லைனில் பப்ஜி விளையாடு வதை பார்த்த ரஹ்மத் மீரா மகனை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்வேகம் அளிக்கும் பேச்சை யூடியுப் தளத்தில் குழந்தைகள் பார்த்துள்ளனர். அதில் அவர், ‘பப்ஜி விளையாட்டு எதிர்காலத்தை பாழடித்து விடும். பப்ஜி விளையாடாமல் இருக்கும் குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கித் தருவேன்’ என ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த உவேஷ் அல்தாப் தனது தாயாரிடம் பப்ஜி விளையாட்டை தான் கை விட்டு விட்டதாகவும், டிஜிபி தனக்கு சைக்கிள் வாங்கி தருவார் என்றும் கூறியுள்ளார். தனக்கு பரிசாக கிடைக்கப் போகும் சைக்கிளுக்காக 3 ஆண்டுகளாக காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை வளாகத்துக்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்போது, அங்கு நின்ற உவேஷ் அல்தாப், ‘தங்களின் பேச்சால் பப்ஜி விளையாட்டை கைவிட்டு விட்டேன். எப்போது சைக்கிள் வாங்கி தருவீர்கள்?` என கேட்டுள்ளார்.

இதையடுத்து டிஜிபி நடந்த நிகழ்வுகளை உவேஷ் அல்தாப்பின் தாயாரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். பின்னர், அவருக்கு தனது செலவில் சைக்கிள் வாங்கி கொடுப்பதாக கூறிச் சென்றுவிட்டார். இந்நிலையில் கன்னியாகுமரி யில் நடை பெற்ற விழாவில் டிஜிபி கலந்து கொண்டு, உவேஷ் அல்தாப்புக்கு சைக்கிள் வழங்கு வதாக இருந்தது .

ஆனால் முக்கிய அலுவல் காரணமாக அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. அதே நேரம் டிஜிபியின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை காவல்துறை இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் ஆகியோர், சிறுவன் உவேஷ் அல்தாப்புக்கு சைக்கிளை பரிசளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x