

அதிமுக பொதுச் செயலாளர் ஆனார் இபிஎஸ்: அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்ற கட்சியின் சட்ட திட்ட விதியின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு.பழனிசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக பொதுச் செயலாளராக நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர். என்னை அதிமுக பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்" என்று கூறினார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதால், தடை எதுவும் விதிக்க முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
இபிஎஸ் பதவி குறித்து திருமாவளவன் கருத்து: "இபிஎஸ் அணியினர் சட்டபூர்வமாக வென்றிருக்கிறார்கள், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், இதில் பாஜக மற்றும் சங்பரிவார்களின் ஆதரவும் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நெஞ்சிலே நிறுத்தி சமூக நீதிக்கான ஓர் இயக்கமாகவே அதிமுகவை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘பிளஸ் 2 கணிதத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்குக’: தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 கணிதத் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பான் - ஆதார் எண் இணைப்புக்கு கால அவகாசம் நீடிப்பு: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாளை மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30 வரை மூன்று மாதங்கள் நீட்டித்து கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, மார்ச் 31, 2023-க்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், பான் அட்டை செயலிழப்பது உள்ளிட்ட பல்வேறு இன்னல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் தற்போது ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாஜகவினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்: கடுமையாகப் போராட தயாராகுங்கள் என்று பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “கட்சி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது; வெற்றியின் சுவையை அதிகம் சுவைத்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்றொரு பக்கத்தில் எதிர்ப்பும் அதிகரிக்கும். எனவே, கடுமையான போராட்டத்திற்கு தயாராக வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அரசு பங்களா விவகாரத்திற்கு ராகுல் காந்தி பதில்: தகுதி இழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு ராகுல் செவ்வாய்க்கிழமை பதிலளித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்கிறேன். இதுவரை இங்கு கழித்த நினைவுகள் மகிழ்ச்சியானவை. நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கான வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி. பங்களாவை காலி செய்வதற்காக எனக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ள அம்சங்களுக்கு நான் கட்டுப்படுவேன்'' என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ராகுல் காந்தி வசிக்க தனது பங்களாவை தர தயார் என்று காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ராகுல் மீதான வழக்கை உன்னிப்பாக கவனிக்கிறோம்: அமெரிக்கா: ராகுல் காந்தி மீதான வழக்கை உற்றுநோக்கி வருவதாகவும், ஜனநாயக மாண்புகளை மதிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், "நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக மாண்பைப் பேணுவது, கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது போன்றவற்றில் இந்தியா அமெரிக்கா ஒருமித்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது. மனிதநேயத்தைப் பேணுதல் என்பது இருநாடுகளில் ஜனநாயகக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமுக உறவைப் பேணவே விரும்புகிறது" என்றார்.
புல்லாங்குழல் இசைக் கலைஞர் சுதாகர் மறைவு: புல்லாங்குழல் இசைக் கலைஞர் சுதாகர் மறைந்தார். இளையாராஜா பாடல்களில் இவரது புல்லாங்குழல் மாயம் செய்திருக்கும். 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்', 'இளையநிலா பொழிகிறதே', 'அழகிய கண்ணே', 'புத்தம்புது காலை', 'பனிவிழும் மலர்வனம்' என பல பாடல்களுக்கு அவரது புல்லாங்குழல் மெருகூட்டியிருக்கும் என்பது நினைகூரத்தக்கது.