Last Updated : 28 Mar, 2023 06:19 PM

 

Published : 28 Mar 2023 06:19 PM
Last Updated : 28 Mar 2023 06:19 PM

கோவையில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

ஜப்தி செய்யப்பட்டு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து. | படம்:க.சக்திவேல்.

கோவை: கோவையில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (மார்ச் 28) அரசு சொகுசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கோவை பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதீஸ் (27). இவர், கடந்த 2018 பிப்ரவரி 3-ம் தேதி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உக்கடம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அரசு நகரப் பேருந்து (3டி) பின்புறமாக வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் இருந்து பேருந்தின் அடியில் விழுந்த சதீஸ், சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சதீஸ் உயிரிழந்தார்.

எனவே, விபத்தால் தனது மகன் உயிரிழந்ததற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கக்கோரி சதீஸின் தாய் விஜயலட்சுமி, கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ''சதீஸின் குடும்பத்துக்கு ரூ.12.39 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும்" என கடந்த 2019 அக்டோபர் 31-ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து, விஜயலட்சுமி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. பின்னர், கடந்த ஜனவரியில் ரூ.7.49 லட்சம் மட்டும் இழப்பீடாக வழங்கப்பட்டது. மீது தொகையான ரூ.9.33 லட்சம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, கணபதி-கோவைப்புதூர் வழித்தடத்தில் இயங்கும் அரசு சொகுசுப் பேருந்து (3டி) இன்று ஜப்தி செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x