அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் பயணிகள் - விழிப்புணர்வை அதிகரிப்பதில் ரயில்வே நிர்வாகம் தீவிரம்

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் பயணிகள் - விழிப்புணர்வை அதிகரிப்பதில் ரயில்வே நிர்வாகம் தீவிரம்
Updated on
1 min read

சென்னை: சொற்பக் காரணங்களுக்காக, ரயில்களில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பயணிகளிடம் விழிப்புணர்வை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. தினமும் 1,303 ரயில்களும், மின்சார மற்றும்
மெமு ரயில்கள் 650-ம் இயங்குகின்றன. இவற்றில் தினமும் சுமார் 22 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

ரயில்களில் தீ விபத்து, திருட்டு, வழிப்பறி, தவறிவிழுதல் நிகழ்ந்தால், பயணிகள் ரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்துவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக சொற்பக் காரணங்களுக்காக ரயில்களில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

படிக்கட்டில் நின்று பயணிக்கும்போது தவறிவிழும் செல்போனை எடுக்கவும், வழியில் உள்ள நிலையங்களில் இறங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மீண்டும்
ரயிலைப் பிடிப்பதற்கும், தவறவிடப்பட்ட பொருட்களை ஒப்படைக்கவும் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்கின்றனர். ரயில் மாறி ஏறிவிட்டால்கூட, அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்கும் சம்பவங்கள் நேரிடுகின்றன.

இதுபோல, சொற்பக் காரணங்களுக்காக, ஓடும் ரயிலை அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்துவோர் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989, பிரிவு 141-ன் கீழ் வழக்கு பதிவு செய்து, ரூ.1,000 அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் 2022-ம் ஆண்டில் 2,573 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,547 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் ரூ.15.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டிலிருந்து 2022 வரை பதிவான வழக்குகளை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில் பதிவான வழக்குகளே அதிகம்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தேவையின்றி அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுப்பதைத் தவிர்க்குமாறு பயணிகளுக்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏதேனும், அவசரநிலை அல்லது குறைகள் ஏற்பட்டால், பயணிகள் முதலில் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், ரயில் உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே, தேவையின்றி அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுப்பது தொடர்பாக பயணிகளிடம் விழிப்புணர்வை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மனோகரன் கூறும்போது, " 20 பெட்டிகளுடன் டீசல் என்ஜினில் 100 கி.மீ. வேகத்தில் இயங்கும் ஒரு விரைவு ரயில் நின்று, மீண்டும் புறப்பட்டுச் சென்றால் சுமார் ரூ.22 ஆயிரமும், மின்சார இன்ஜினில் இயங்கும் ரயில் நின்றால் ரூ.13 ஆயிரமும் இழப்பு ஏற்படும். எனவே, பயணிகளிடம் இதுகுறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in