Published : 28 Mar 2023 04:30 AM
Last Updated : 28 Mar 2023 04:30 AM

பால் கலப்படத்தை 30 விநாடியில் கண்டறியலாம்: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் புதிய கருவி கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 விநாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே எளிதாகச் செய்து பார்க்க முடியும். யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்ட கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இதன் மூலம் கண்டறியலாம்.

பாலின் தூய்மையைக் கண்டறியும் வழக்கமான ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைக்கு கூடுதல் செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவியின் மூலம் குடிநீர், பழச்சாறு, மில்க் ஷேக் போன்றவற்றிலும் கலப்படம் ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்ய முடியும்.

ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை இணைப் பேராசிரியர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா தலைமையில் நடத்தப்பட்ட இந்த பால் கலப்பட தடுப்பு ஆராய்ச்சியில், ஆராய்ச்சியாளர்கள் சுபாஷிஸ் பட்டரி, டாக்டர் பிரியங்கன் தத்தா ஆகியோரும் இணைந்து ஈடுபட்டனர். அவர்கள் இணைந்து தயாரித்த ஆய்வுக் கட்டுரை ஆய்விதழான நேச்சரில் வெளியிடப்பட்டுள்ளது.

இக்கருவியின் செயல்பாடு குறித்து பல்லப் சின்ஹா மஹாபாத்ரா கூறும்போது, ‘‘3டி காகித அடிப்படையிலான இந்த நுண் திரவக் கருவி (microfluidic device) மேல் மற்றும் கீழ் உறை
களையும், சாண்ட்விச் அமைப்பிலான நடுத்தர அடுக்கையும் கொண்டதாகும். அடர்த்தியான திரவத்தையும் சீரான வேகத்தில் கொண்டு செல்லும் பணியை 3டி வடிவமைப்பு சரியாகச் செய்யும்.

காகிதம் ரீஏஜென்ட்களுடன் வினைபுரிந்து உலர வைக்கும் இரு காகித அடுக்குகளும் உலர்ந்தபின் இரு பக்கங்களிலும் ஒட்டிக் கொள்வதுடன், உறைகளும் இருபக்க டேப்புடன் ஒட்டிக் கொள்ளும் இந்த வடிவமைப்பில் நான்காம் கிரேடு வாட்மேன் ஃபில்டர் பேப்பர் பயன்படுத்தப்படுவதால், திரவ ஓட்டத்துக்கு உதவுவதுடன், ரீஏஜென்ட்களை அதிகளவில் சேமித்துக் கொள்ள வைக்கும். அனைத்து ரீஏஜென்ட்களும் காய்ச்சி வடிகட்டிய நீர் அல்லது எத்தனாலுடன் அதனதன் கரையும் தன்மைக்கேற்ப கரைந்துவிடும்.

நிறமானிக் கண்டறிதல் நுட்பங்களைப் பயன்படுத்தி, கலப்படப் பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு திரவ மாதிரிகளால் கண்டறியப்படுகின்றன" என்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x