

சென்னை: தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாதொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று காணொலி மூலமாக கரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது தமிழக அரசு எடுத்துள்ள கரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். தமிழகத்தில் தற்போது நிலவும் சுகாதார சூழல் குறித்த தகவல்களைக் கேட்டறிந்த ராஜேஷ் பூஷண், சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தி வருகிறோம். பரிசோதனை, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், சிகிச்சை, தொடர் கண்காணிப்பு, நோய்த் தடுப்பு ஆகியவற்றை செயல்படுத்தி வருவதை மத்திய அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்தோம்.
மருத்துவ கட்டமைப்புகள்: போதிய அளவு மருந்துகள், மருத்துவக் கட்டமைப்புகள், பரிசோதனை உபகரணங்கள் இருப்பது குறித்தும் விளக்கினோம். முதியோர் மற்றும் இணைநோய் பாதிப்புள்ளவர்கள் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்க்கவும், மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி, முகக்கவசத்தை கட்டாயமாக்கவும், பொது சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் கூறினோம்.
தமிழகத்தில் உள்ள 342 கரோனாபரிசோதனை ஆய்வகங்களும் இதற்கு முன்பு வரை இந்தியமருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) இணையதளத்தில் தங்களது பரிசோதனை விவரங்களை தினமும் பதிவேற்றியது. அதன் அடிப்படையில் மத்திய அரசு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. கரோனா குறைந்தவுடன் சரிவர பதிவேற்றம் நடைபெறுவதில்லை. மீண்டும் அந்த விவரங்களை முறையாக பதிவு செய்ய ஆய்வகங்களை அறிவுறுத்துமாறு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரோனா தொற்று 100-ஐ கடந்தது: இதற்கிடையே, தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. நேற்று ஆண்கள் 52, பெண்கள் 50 என மொத்தம் 102 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 28 பேருக்கும், கோவையில் 14 பேருக்கும், செங்கல்பட்டில் 10 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 76 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 634 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள் ளது.