Published : 28 Mar 2023 06:30 AM
Last Updated : 28 Mar 2023 06:30 AM

கோவை தொழில் நிறுவனங்களில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

கோவை தொழில் நிறுவனம் ஒன்றில் தொழிலாளரின் உடல்வெப்பத்தை பரிசோதிக்கும் ஊழியர்.

கோவை: கோவை மாவட்டத்தில் உற்பத்தித்துறையின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த தொழில் நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 8 லட்சம் தொழிலாளர்கள் இங்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து கோவை ‘சிட்கோ’ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்க (கொசிமா) தலைவர் நல்லதம்பி கூறியதாவது: 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் தொழில் நிறுவனங்கள் மீண்டு வரத் தொடங்கியுள்ளன. தற்போது மீண்டும் கரோனா பரவல் தொடங்கியிருப்பதால் தொழில்முனைவோர் மத்தியில் கவலை ஏற்பட்டுஉள்ளது.

எனினும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொழில் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. தினமும் தொழிலாளர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகக்கவசம், தனி மனித இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்க (டான்சியா) துணை தலைவர் சுருளிவேல் கூறியதாவது: ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நிலவிய மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு, தற்போதுதான் மெல்ல இயல்பு நிலையை நோக்கி தொழில் நிறுவனங்கள் திரும்பத் தொடங்கியுள்ளன.

தினமும் தொழிலாளர்களின் உடல்வெப்பம் மட்டுமின்றி பல்ஸ் ஆக்ஸிஜன் அளவு, முகக் கவசம் கட்டாயம் அணிதல், பணியாற்றும் போதும், உணவு இடைவேளை, டீ இடைவேளை உள்ளிட்ட சமயங்களிலும் கேன்டீன் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

- இல.ராஜகோபால்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x