

தலைமைச் செயலக உடற்பயிற்சி கூடங்களும் திறப்பு
தலைமைச் செயலகத்தில் ரூ.28 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தையும் ரூ.50 லட்சம் செலவில் தலைமைச் செயலகப் பணியாளர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சிக் கூடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதுகுறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10 மாடி கட்டிடமான நாமக்கல் கவிஞர் மாளிகையை ரூ.28 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
கட்டிடத்தின் முகப்பு, பாரம்பரியத் தோற்றத்தோடு, நவீன கட்டிடக் கலை நுணுக்கங்களை உள்ளடக்கியதாக வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. உயர் கட்டுமானத்துடன் கட்டிடக் கலை வல்லுநர் குழுவால் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. நவீன முறையில் அழகுபடுத்தப்பட்டு, அழகிய புல்வெளி, நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.28 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.
தலைமைச் செயலகத்தில் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு நவீன உடற்பயிற்சி சாதனங்களுடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். தலைமைச் செயலக பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.சுந்தரராஜ், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.