Published : 28 Mar 2023 06:53 AM
Last Updated : 28 Mar 2023 06:53 AM
சென்னை: கடந்த ஆண்டில் பொதுப்பணித்துறையின் 23 அறிவிப்புகளை செயல்படுத்திய பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டுத் தெரிவித்தார்.
பொதுப்பணித் துறை திட்டப் பணிகள், அறிவிப்புகள தொடர்பாக, அமைச்சர் எ.வ.வேலு நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 23 அறிவிப்புகளை செயல்படுத்தியமைக்காக பொறியாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களின் புனரமைப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம், அதே வளாகத்தில் கட்டப்பட உள்ள அருங்காட்சியகம், மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகள், கிங்நிறுவன வளாகத்தில் பன்னோக்கு மருத்துவமனைக் கட்டிடம், 69 புதிய தொழில்நுட்ப பணிமனைகள், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்படும் ஜல்லிக்கட்டு அரங்கம், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கட்டப்படும் அருங்காட்சியக கட்டுமானப் பணி ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும், தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட நீதிமன்றக் கட்டிடங்களின் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படும் புதிய உதவிப் பொறியாளர்களுக்கு, உரியகளப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வேலு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, பொதுப்பணித் துறைச் செயலர் க.மணிவாசன், முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT